அபிராமி – 60

படம்

பாடல்-1
———–

பாதாதி கேசத்தின் பான்மைக்குள் வீழ்கின்ற
பாதிப்பும் உண்டு கொஞ்சம்
பாதாளம் ஏழிலும் காணாத பாதத்தைப்
பார்ப்பதற்கென்ன பஞ்சம்

வேதாளம் போல்மாய மரத்திலே ஏறிட
விழையுதே வஞ்ச நெஞ்சம்
வேதங்கள் அறியாமல் விரிகின்ற வித்தகீ
விரல்நீழல் நீட்டு தஞ்சம்

வாதாடிப் போயிற்று வாழ்க்கையும் ஆதலால்
வளர்கிலேன் கொஞ்ச நஞ்சம்
வருஷிக்கும் மலர்க்கையின் வளைவுக்கள் எனைத்தாங்கி
வருடினால் அன்பு மிஞ்சும்

போதாடும் நெஞ்சுக்குள் பூரிக்க வேவைத்துப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-2
———–

பேசாமல் விட்டதேன் பிழியாமல் நின்றதேன்
பிழை செய்த்து என்ன கூறு
பிய்ந்திட்ட வன்நெஞ்சத் துகள்யாவும் அம்மையின்
பிம்பத்தைக் கொண்டவாறு

கூசாமல் நான்கேட்டும் கொடுக்காமற் போவதோ
கோபத்துக் கென்ன பேரு
கொடும்பாவி ஆயினும் குனிகின்ற வனைத்தூக்கிக்
குழைப்பித்துப் பூசு நீறு

பூசாமல் புறப்பட்ட போதிலும் பாவத்தைப்
போக்கவே வந்த ஆறு
பொங்க்ட்டும் எனைச் சூழ்ந்து தங்கட்டும் நான் கொள்ளும்
புளகாங்கி த்த்தில் ஏறு

போ – சாக என்றென்னை வீட்டாமல் கழலுக்குள்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

படம்

பாடல்-3
————

யாரிட்ட சாபமோ அழியாத கோபமோ
அதிகமாய் வரும் பாவமோ
அத்தாணி மண்டபத் தரசாணீ பேசாத
அழிச்சாட்டி யம் தீருமோ

ஏறிட்டுப் பார்க்கவோர் எண்ணமும் இல்லையோ
இறங்குமோ உளப் பாரமோ
என் பிழை என்னவோ என்று நீ சொல்லவோ
ஈகைக்கு நேரமிலையோ

தாரிட்ட புரி சங்கம் தலைதாழ்த்தி நோக்கவோர்
தயவுக்குத் தடையும் எதுவோ
தர்மமோ இத தகு மோமுறை தான் எனில்
தாமதம் சரியாகுமோ

போரிட்ட உலகத்தில் போக்காமல் கழலுக்குள்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-4
————

கற்பகத் தருவுக்குப் பேர் உந்தன் கை என்று
கனவேக மாக வந்தேன்
கண்களில் ஒருகோடி காம தேனுப் பசு
கறப்பதைப் பாடி வந்தேன்

கற்பனைக் குள் வந்த சொப்பனத் தேவதைக்
காவலைத் தேடி வந்தேன்
கறங்காட்டும் பிரபஞ்ச மே எந்தன் நடைபாதை
கால்களில் ஆடி வந்தேன்

கற்பதெல் லாம் உந்தன் கரத்துக்குள் பல்கலைக்
கழகங்கள் கோடி கண்டேன்
கைவீச்சு கண்வீச்சு கழல்வீச்சு அனைத்திலும்
காதலாய் மோடி உற்றேன்

பொற்பதம் தருவதற் கின்னுமேன் தாமதம்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-5


நாசிக்குள் வருகின்ற மூச்சுக்கள் யாவும்உன்
நயனங்கள் பார்த்த காற்று
நாயினே னைக்குளிப் பாட்டிடச் சோவென்று
நடுவானம் விட்ட ஊற்று

வீசிக்கொள் எனத்தந்த விரல்பத்தும் எனக்காக
விசிறியே என்னை ஆற்று
விரகத்தில் ஆழ்கிறேன் வேதனை தனைமாற்று
வெந்தழல் ஆகி நீற்று

ஆசிக்குள் வைத்துந்தன் அருகாமை யேதந்து
அடைக்கல மாக ஏற்று
அருள்வண்ணப் பிரகாசம் பெய்யுமோ அம்மையின்
அலங்கார மான கீற்று

பூசித்து வாழ்த்தினேன் போற்றி ஓம் போற்றியே
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-6

சாக்காட்டுக் கொள்ளிக்குள் போவாமல் என்னைஉன்
சரிபாதி ஆக்கி வைத்தாய்
சதாகாலம் அகலாத சகவாசம் இதுவென்ற
சம்பந்தம் சொல்லி வைத்தாய்

ஆக்காட்டும் குழந்தையாய் அண்ணாந்து பார்ப்பேனை
அம்மைஎன்று எண்ணவைத்தாய்
ஆயுளை நீட்டிக்கும் அருள்என்ற அமுதத்தை
அள்ளியே தின்ன வைத்தாய்

தூக்காட்டும் அறிதுயில் சொக்குற்று நான்சாய
சுதிகோடி பண்ணி வைத்தாய்
சுடர்காட்டும் நின்விழிச் சுழற்சிக்குள் நான் சிக்க
சுகம்என்ற கண்ணிவைத்தாய்

பூக்காட்டும் கையால்வா வாவென்று வரவேற்றுப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-7

படம்

கயல்காட்டும் கண்ணுக்கும் கடவூரின் மண்ணுக்கும்
கைம்மாறாய் என்ன செய்ய
கைப்போது வழியாகக் கனிவார்த்தை அர்ச்சித்துக்
கவிநூறு கோடி பெய்ய

செயம்காட்டும் கரத்துக்கும் செங்காந்தள் விரலுக்கும்
செய்நன்றி என்ன செய்ய
சிங்காரப் பேச்சுக்கும் சிற்றாடை வீச்சுக்கும்
சீவனைத் தந்தும் உய்ய

செயல்காட்டும் சிந்தூரச் செல்விக் கென் சிந்தையே
சேவித்தும் என்ன செய்ய
சித்தம் குழம்பினான் மகுடதீ பன்என்று
செகம் யாவும் என்னை வைய

புயல்காட்டும் உலகத்தில் புகழ்மட்டும் ஒட்டாமல்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-8

மின்னேறும் இடைமெல்ல மெல்லவே மிழற்றினால்
மேகலை சிந்தும் நாதம்
மீட்டாத சுகராகம் தனைமீட்டும் என் மன
மேடைக்குள் ஆடும் வேதம்

புன்னேறும் மனத்தேனைப் பொன்னாக்கி வைக்கவே
புறப்பட்டு வந்த தீபம்
பூவேறி நின்றாலும் புலம்ஏறி வந்து நான்
பூசிக்க வந்த ஞானம்

முன் ஊறும் அருள்வெள்ள முத்தங்கள் என் வீட்டு
முன்றிலில் மோதி ஆடும்
முத்தான பேச்சுக்கள் மோகனப் பாஷைக்குள்
முத்தமிழ் ஆக மாறும்

பொன்னேறும் ஆகத்தில் பூரிக்க வைத்தென்னைப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-10

நூல் திறம் ஒருகோடி நூற்றையும் அம்மையுன்
நூபுரத் தொலி பேசுமே
நோக்கிலும் வாய்சொலும் வாக்கிலும் பலகால
நோன்புகள் ஒளிவீசுமே

பால் திரும் பாமல்நீ பார்வையை மூடினும்
பரிமளம் மேற் பூசுமே
பகலவன் போல் உரு மாறுமே புன்உடல்
பசும்பொன்னின் வடிவாகுமே

தோல்வண்ணம் பொன்வண்ணத் தொருநிறம் போல்மாறித்
தோத்திரக் கவிபாடுமே
சுந்தரீ சுந்தரீ என்கின்ற சொல்லுக்குள்
தூங்காது புவி ஏழுமே

பூத் திறம் காட்டும்நின் பொற்சூட கக் கரம்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

படம்

பாடல்-11

காதாடும் குழைதன்னை நிலவாக மாற்றியே
காட்டிடும் கண்மணிக்குக்
காயத்து மூப்பெலாம் கனகத்து வடிவாக்கும்
காரியம் பெரியதில்லை
தாதாடும் பவளத்திற் கிடையிலே நான் சொக்கத்
தரளமாய்ப் பூத்த முல்லை
சத்தான முறுவற்குப் பித்தான என் உள்ளம்
சாம்ராஜ்ஜி யத்தின் எல்லை

தோதாக உனக்கென்று விரித்ததே அல்லாமல்
சொர்க்கங்கள் ஏதும் இல்லை
சுந்தரீ என்கின்ற சொல்லுக்குக் காவதத்
தூரத்தில் ஓடும் தொல்லை

பூதாதி கணத்தோடு புலக்காவல் பூத்து என்னைப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

 

பாடல்-12

வாக்குக்கும் பேச்சுக்கும் வருணிக்க ஒட்டாமல்
வாசமாய்ப் பூத்த தென்றல்
வானத்தை அண்ணாந்து வா என்று கேட்டதும்
வருஷிக்க வந்த கொண்டல்

தூக்கத்தைப் போக்கவும் சொக்கப் பொன் ஆக்கவும்
துணையாகி நின்ற அன்றில்
தூவண்ணக் கைக்காந்த ளாற் தொட்டுத் தோள் சாய்ந்து
சோதியைக் காட்டும் மின்னல்

ஏக்கத்தில் யான் விக்கி ஏங்காமல் இனிக்கின்ற
இன்சுவை யான கன்னல்
என்று கொல் பூணுவேன் ஏந்திழை யாளொடு
இணைபிரி யாத பின்னல்

போக்கற்ற உலகத்தில் புகுத்தாமல் எனைவந்து
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

பாடல்-13
சோலையிற் பூக்கின்ற பூக்களும் தூமலர்த்
தொகைகளும் உனது பாதம்
சொல் ஒன்று சுந்தரீ என்றதும் நாவிலே
சொட்டுமே ஞான கீதம்

வாலையின் பேர் சொல்லி வாசிக்க வா சிக்க
வசப் படும் வான நாதம்
வையத்தில் வேறென்ன வசனங்கள் நாம்மென்றும்
வாய்க்குளே ஓதும் வேதம்

வேலையிற் காண்கின்ற கோலங்கள் பூரா நீ
விளையாடு கின்ற மாதம்
வினைபட்ட நாயேற்குன் விரல்தந்த பிடியன்றி
வேறென்ன மிச்ச மீதம்

போலவேறு எவர் உண்டு உனைவிட்டுப் பூமியில்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-14

காமாலைக் கண்கொண்டு காண்கின்ற உலகத்தில்
கடிபட்டு ரெம்ப நொந்தேன்
கால்வருடு வோர்களை யா நம்ப ? அம்மே உன்
கழல் மட்டும் நம்பி வந்தேன்

கோமாட்டி எனைவந்து கொள்ளா திருப்பதோ
குழை கொண்டு வெம்பி நின்றேன்
கூவாத குரலுக்கும் கொடுக்காத குரலுக்கும்
குழைக்கவோ செந்தமிழ்த்தேன்

பாமாலை ஒருநூறு பாடவும் பார்த்து நீ
பாடாத முகம் குறித்தேன்
பரிதாபம் அல்லையோ பாவம்யான் இல்லையோ
பார்வைக்குத் தான் வெறித்தேன்

பூமாலை போல்மாற்றிப் புரிசங்கில் அணிவித்துப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

படம்
பாடல்-15

அலர் ரெம்பப் பேசியே அருச்சிக்கும் மண்ணுக்குள்
அடிபட்டு நின்ற ஓரம்
அபிராம வல்லியல் லோவந்தும் ஆட்கொண்டுஎன்
அகத்திலே பனித்த ஈரம்
உலராமல் உணராமல் ஊற்றுக்கண் பாய்ச்சினும்
உளம் கரை யாத வாறும்
ஒருபோது பேசியும் மறுபோது பாராமல்
உம்மென்று நின்ற வாறும்

மலர்க் கூந்த லாளுக்கே அழகில்லை அழகில்லை
மறையட்டும் தூர பேதம்
மதிவெள்ளம் தாராயேல் மறுகுவேன் போச்சுடி
மனசெலாம் அந்தகாரம்

புலர்கின்ற போதுன்றன் போதுக்கள் பற்றவோ
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-16

கார்ஏந்தும் கூந்தல்எம் கடைவாயில் விசிறட்டும்
கட்டியம் கூறட்டுமே
கனிபெய்யும் சொல்லுக்கும் பனிபெய்யும் வில்லுக்கும்
கர்வங்கள் தோற்கட்டுமே
வார் ஏந்தும் மலர்ப்போது வார்க்கின்ற ஞானப் பால்
வாய் ஈரம் சாரட்டுமே
வளை ஏந்தும் கைவீச வளைவுக்குள் நான் பட்ட
வருத்தங்கள் நீறட்டுமே

நீர் ஏந்தும் கண்ணால்எம் நெருப்பேந்தும் வல்வினை
நிமிடத்தில் சாகட்டுமே
நிலன் ஏந்தும் நின்பாதம் வலம் ஏந்தி என் மனம்
நித்திலம் பூக்கட்டுமே

போர் ஏந்தும் புவனத்தின் புணை போதும் போதுமே
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 


படம்

 

 

 

பாடல்-17

கண்மூடி அறிதுயில் வயப்பட வே உந்தன்
கைவிரல் உண்டுதானே
கைநாடி பார்த்திடில் துடிப்புடன் சொல்வதோ
கண்மணீ என்றுதானே

மண்மூட வா உடல் அல்லவே வார்க்கிறேன்
மங்கைபால் நின்றுதானே
மந்தாரப் பூங்கோதை மலருவாள் நம்வீட்டு
மனைவாசம் கொண்டுதானே

பெண்மூட வா என்று என் பிஞ்சுள்ளம் கேட்டது
பிழை என்ன நன்றுதானே
பிள்ளைக்கும் பித்தர்க்கும் பேர்அருட் பெருமழை
பெய்யட்டும் இன்றுதானே

புண்மீடித் திரிகின்ற பொதிக் கூட்டை வேதித்துப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-18

படை தாங்கும் கை என்னை பாலித்து நிற்கட்டும்
பகை யாவும் பிசிறட்டுமே
பனிதூங்கும் கார் கூந்தல் பயம் ஓங்க யான் வேர்க்கில்
பகல் பூரா விசிறட்டுமே

குடை தாங்கும் சிரம் என்னை குறிப்பாகப் பார்க்கட்டும்
குறை போக்கி அருளட்டுமே
கொடி தாங்கும் இடை ஒல்க நடை தாங்கும் பதம் என்னை
கொள்ளை கொண்டு அடிக்கட்டுமே

இடை தாங்கும் பொன் ஆகம் இசிகின்ற அருளால் என்
எதிர்காலம் கைக்கு எட்டுமே
இமை தாங்கும் நயனத்தின் வீச்சு எந்தன் காவற்குள்
இடம் போட்டு வைக்கட்டுமே

புடை தாங்கப் புறப்பட்ட பூ வல்லீ வா வந்து
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

 

 

 

பாடல்-19

 

கொத்தாகிப் பூக்கின்ற குமிண்வாயின் சிரிப்புக்குக்
கொஞ்சமோ எனை இழந்தேன்
குத்தால வீழ்ச்சியாய்க் கொட்டிடும் அருள் வெள்ளக்
குவியலில் நிலை மறந்தேன்
வித்தாரச் சொல்லுக்கும் விஞ்ஞானப் பேச்சுக்கும்
வெற்றிடம் போல் உணர்ந்தேன்
வித்தாகி வியாபித்து விரிதாம ரை நங்கை
விண்ணுக்குள் ளே உயர்ந்தேன்

பத்தாகி அத்தோடு பதினொன்று போல் ஆகிப்
பார்க்கவோ உடல் எடுத்தேன்
பத்தாது பத்தாது பல கோடிப் பேர்க்குள் ஒரு
பரிணாம வடி வெடுத்தேன்

புற்றான உலகத்தின் புரை தாளு தில்லையே
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-20

பண்ணூறும் பேச்சுக்கும் பனி ஊறும் இதழுக்கும்
பலகாலம் தவமிருந்தேன்
பன்னூறு வருஷங்கள் பறந்தோடி விட்டாலும்
பரிசுக்கு நின்றிருந்தேன்

கண்ணூறும் வேல் பாய்ந்த காவதம் தெரியாமல்
கடைவாயில் பூத்திருந்தேன்
கண்ணீரின் ஊற்றுக்கள் கைபட்டு விலகட்டும்
காலாறக் காத்திருந்தேன்

மண்ணூறி மக்கவோ மாயத்தில் சிக்கவோ
மானுடப் பிறப் பெடுத்தேன்
வலமேறி வல்லியின் புலம்ஏறி மாயாத
வடிவுற்று இறப்பறுத்தேன்

புண்ணூறும் உலகத்தின் பொறி விட்டு வந்தேனைப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-21

தரை எங்கும் என்பேச்சைத் தலை சாய்த்துக் கேட்கும் நின்
தாமரைத் தாள் நடந்தால்
தமிழ் என்றன் வாய் வீச்சில் தை என்று நடம் ஆடும்
தையல்என் பால் இருந்தால்

கரை எங்கும் ஆனந்தக் கா விரிப்பேன் அம்மே
காவிரி யாய்க் கிடந்தால்
ககனத்துப் பிரமாண்ட மாய்விரி வேன் என்னுள்
கலந்து நீ ஆர்பரித்தால்

உரை எங்கும் ஒளிவீச உலகத்தை நெம்புவேன்
உச்சரிப் பில் உயிர்த்தால்
உயிர் எங்கும் உடல் எங்கும் உன்மூச்சு வாசத்தை
ஊதியே நீ கலந்தால்

புரை எங்கும் வெளிக் காட்டும் பொல்லாத மண்விட்டுப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-22

கலைஏந்தும் மேனிக்குள் கட்டுண்டு மூடவோ
கவி ஏந்தி வாய் பாடவோ
கரம் ஏந்தும் பாசாங்கு சக்காவல் கொண்டதால்
காலற்குத் தடை போடவோ

அலை ஏந்தும் கங்கையோடு ஆடுவான் தன்னோடு என்
அருகாமையும் வேண்டவோ
அழகேந்தும் வல்லிப்பெண் அமுதேந்தி வரவேண்டும்
அபிலாஷை வரம்ஆகுமோ

சிலை ஏந்தும் சிங்காரி சித்த த்துள் குடிகொண்ட
சிங்காரக் கதை அல்லவோ
செய்யாரம் கண்கூசச் சிற்றாடைத் துடியாடும்
தெம்மாங்குக் கவி அல்லவோ

புலை ஏந்தும் உடல் வண்ணம் பொன்வண்ணம் கொண்டுய்ய
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

பாடல்-23

 

பூக்கின்ற பூக்களும் புலர்கின்ற நாட்களும்
பூவைக்குப் பூக்கட்டுமே
பூக் கொன்றை சுரக்கின்ற வாசத்தில் எம் வீடு
பொழுதுக்கும் மணக்கட்டுமே
காக்கின்ற கைகளும் கறக்கின்ற கண்களும்
கனிவோடு காக்கட்டுமே
கரைகின்ற நேசத்தில் கருப்பூர வாசத்தில்
கைத்தாளம் போட ட்டுமே

வாக்கென்றும் ஈகின்ற வல்லிக்கென் மடநெஞ்சில்
வசந்தங்கள் குடி கொள்ளுமே
வருஷங்கள் பூராவும் வருஷித்த பிரவாகம்
வருணத்தை அடிக்கட்டுமே

போக்கென்ன போக்கிடம் பூங்கழல் மட்டுமே
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-24

தைதாங்கும் மார்கழித் தமிழ்மாத வைகறைத்
தவம்தாங்கத் தோணுகில்லேன்
தளைதாங்கும் பாவோடு சதகங்கள் பாடியும்
தரிசனம் பூணுகில்லேன்

மெய்தாங்கும் வெண்ணீறு மிளிர்தாங்கப் பூசியும்
மின்னலைக் காணுகில்லேன்
மெலிவுற்றுப் போயினான் மகுடதீ பன் எனில்
மெல்லவும் நாணுகில்லேன்

கைதாங்கு வாரில்லை கசடான உலகர்தம்
கண்ணேறு தாளுகில்லேன்
கண்தாங்கும் இமைபோலக் காப்பாற்றும் நாளுக்குக்
கவனத்தைப் பேணுகில்லேன்

பொய்தாங்கும் மக்களின் புறம் தாங்க வில்லையே
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

 பாடல்-25
நீர்பூத்த நேத்திரத் துடன் வந்து நிற்கிறேன்
நெருக்கத்தில் விரிசல்என்ன
நேர்பூத்த நேரிழை நிலை பூக்க வேண்டியே
நெஞ்சிலே உருக்கம் என்ன

கார்பூத்த மலர்க் கூந்தல் கட்டுக்குள் எனைக் கட்டிக்
கைவல்யம் செய்ததென்ன
கனிபூத்த வாய் இதழ்ப் பேச்சிலே நெக்குண்டு
கதிமோட்சம் கண்ட தென்ன

வார்பூத்த மென்முலை வயம் பூத்த பொன் ஆக
வடிவுக்குள் நின்ற தென்ன
வான் பூத்த வரித்தோடு வளைபூத்த கையினால்
வான்மதி ஆனதென்ன

போர் பூத்த மனிதர்முன் பொய் பூத்து வாழாமல்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-26

கைவண்ணம் கண்டதோ காதாடும் குழைவண்ணம்
கடைவானில் மதிவண்ணமோ
கார்வண்ணம் கண்டதும் கூந்தலோ அது தாழக்
கறக்கின்ற பனி வண்ணமோ

மெய்வண்ணம் ஒளி்வண்ண மாய்மாற வேண்டினால்
மின்வண்ணம் என் வண்ணமோ
மிதி வண்ணப் பாதங்கள் மேல் வைத்த தீட்சையால்
மெய் வண்ணம் பொன் வண்ணமோ

நெய் வண்ணத்து எரிகின்ற நெருப்புக்குள் அருள் வண்ணம்
நேர்பட்ட நிஜவண்ணமோ
நெகிழ்வண்ணம் வரும் வல்லி நெஞ்சத்து வண்ணத்தில்
நிற்கின்ற கலை வண்ணமோ

பொய்வண்ண மடமாந்தர் புகழ்வண்ணம் விடுவித்துப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

 பாடல்-27

 

பால்வண்ண வெண்ணீற்றைப் பரிசாக்கி வாய் ஊதப்
பாவங்கள் உருண்டோடுக
படை வண்ணம் புடை சூழப் பரிவாரம் அலைமோதப்
பாலித்து அரசாளுக
கால்வண்ணம் எம்வீட்டுக் கடைவாயின் வரை நிற்கக்
களிப்பாகி விளையாடுக
கலீர்என்றுன் வாய்சிந்தும் சிலாபத்து முத்தால் என்
கவிதைகள் உருவாகுக

தால் வண்ணம் கண்கொள்ளத் தாய் வந்து தமிழ் பாடத்
தாலாட்டில் நான் தூங்குக
தட வண்ணம் நீ காட்டும் இட வண்ணம் அதிலே என்
தமிழ் வண்ணத் தேர் ஓடுக

போல் வண்ண மட மாது வேறு எங்கும் கிடையாது
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-28

நா வார்த்த வார்த்தைகள் நீ வார்த்த தல்லவோ
நான் வேறு நயம் சொல்லவோ
நயனத்துப் பரிபாஷைப் பயணத்துட் படுகின்ற
நாள் இன்னும் வரவில்லையோ

கேவு ஆர்த்துஎன் விழிவீழும் தூவானத்தின் சத்தம்
கிஞ்சித்தும் கேட்கவிலையோ
கிளைவார்த்த சுற்றங்கட் கிடைவீழ மாட்டாதுன்
கேண்மைக்கு வரவில்லையோ

தீ வார்த்து நின்றாலும் செபம்கோடி செய்தாலும்
தேவிக்கு இரக்கமிலையோ
திருவார்த்தை நீ பேசும் சேதிக்கு என் மடநெஞ்சம்
தெள்ளேணம் கொட்டவிலையோ

பூவார்த்த தடம்மீதில் பொன்வார்த்து விளையாடிப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

 

பாடல்-29
தேன்ஆளும் சொல்லோடு திரு ஆர்க்கும் வீட்டுக்குள்
செல்வாக்கும் ஓங்கட்டுமே
திசையாளப் பார்க்கின்ற பகையாவும் முறிவுண்டு
சேவித்து நிற்கட்டுமே

மீன் ஆளும் கண்ணோடுஎன் மீதுஆள வந்தால் வாய்
வித்தாரம் பேசட்டுமே
வித்தாரப் பேச்சில்யான் விளையாடப் புவிப் பூரா
விரல்தட்டிக் கேட்கட்டுமே

ஊன் ஆளும் பெம்மாட்டீ உயிர் ஆள வே வந்து
உள்ளே தீ மூட்ட ட் டுமே
உரை வீச்சுப் பேச்சாலும் ஒளி வீச்சுப் பாட்டாலும்
உலகங்கள் உருளட்டுமே

போனாலும் போகட்டும் போதாத காலங்கள்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-30

திடம் இட்ட திருப் பாடல் சபை ஏற வேண்டும் யான்
திரு ஓங்கி நிற்க வேண்டும்
திறன் ஓங்கு அறிவாளர் திருக் கூட்டம் பூரா என்
செய்யுளைக் கற்க வேண்டும்

நடம் இட்ட நாயகீ நமை வலப் பாகத்தே
நாள் எலாம் பூண வேண்டும்
நாதந்த போதமும் வேதாந்த ஞானமும்
நடுவிலே காண வேண்டும்

தடம் இட்டுத் தர உன்றன் தளிர் கையின் விரல் உண்டு
தயவோடு பூக்க வேண்டும்
சயமுண்டு பயம் இல்லை ஆனாலும் எஞ்ஞான்றும்
சாம்பவீ காக்க வேண்டும்

புடம் இட்ட தேகத்துள் பொன் உடல் வேதித்துப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

படம்

பாடல்-31

தூவண்ண மலர்அன்ன தோகைப்பெண் பேச்சால் என்
சொல்வண்ணம் அரங்கேறுக
துதிவண்ணம் நாம்சொல்ல ஜதிவண்ணக் கவி துள்ள
சுடர்வண்ண மாய் வீசுக

நாவண்ணச் சொல்யாவும் நாட்டாரின் மனம்தொட்டு
நவமான் பொருள் பேசுக
நமன்வண்ணம் ஒருபோதும் நத்தாமல் நம் மீது உன்
நயனங்கள் அரசாளுக

தீ வண்ணத் திருமேனிக் குள் நின்று பரிமாறி
செய் வண்ண மெய் கொள்ளுக
செயதக்க அல்லாத செயல் யாவும் தூரத்தே
செல் என்று கை தள்ளுக

பூ வண்ணப் பாதங்கள் பூக்கட்டும் எனக்காகப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-32

மை பூசும் கண்வீச்சை மனையாவும் நீ பூச
மக்கள் தம் திருஷ்டி வருமோ
மாமேகம் அண்ணாந்து நீ பார்த்த மாத்திரம்
மழை மேகம் சுருட்டி வருமோ

கை பூசும் திருநீற்றுப் பூச்சே யாம் தரிக்கின்ற
கவசங்கள் ஆகிவிடுமோ
கமழ்வாசம் அடிக்கின்ற கார் கூந்தல் விடும் காற்று
கதி மோட்சம் பேசி வருமோ

தைப் பூச நன்னாளில் சாவாத கலை கற்றுச்
சபை ஏறும் நாளும் வருமோ
சன்மார்க்க சங்கத்து மத்தியில் நமை ஏற்றுத்
தலையாயன் என்று சொலுமோ

பொய் பூசி வீழுவார் புறமெலாம் ஒட்டாமல்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-33

கரம் ஏந்தும் கருப்பு வில் அங்குசக் கயிற்றோடு
கமலங்கள் வீசி வருக
கணை ஏந்தி கமழ்வாச அம்பெய்து நமை வீழ்த்திக்
கருத்துக்குள் ஆட வருக

இர வேந்தும் பகலுக்கும் பகல் ஏந்தும் இரவுக்கும்
இடைப் பட்ட வேளை வருக
இமை ஏந்தும் கண்ணருள் சுமை ஏந்தி எம் முன்றில்
இறக்கிடும் அம்மை வருக

வரம்ஏந்தி வருக எம் வசம் ஈந்த தை எலாம்
வையங்கள் பெற்று மகிழ்க
வலம் ஏந்தி ஆட்கொள்ள வளை ஏந்தும் கையோடு
வடிவான தாயும் வருக

புரம் ஏந்தி எரித்திடும் புரி சடை யானொடும்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-34

அமிழ்ந்தாடும் கலசங்கள் ஆரத்துக் குட் பட்டு
அடங்காமல் திமிறி ஆட
அரவாடும் இடை ஆட அன்னமாய் நடை ஆட
அலை கற்றைக் குழலும் ஆட

சமன் பாடும் பிரபஞ்சம் தானாடக் கோளங்கள்
தம் அச்சுச் சுழலும் ஆட
சங்கார மும் ஆட சனனங்க ளும் ஆடத்
தரும தே வதையும் ஆட

எமன் பாடும் தான் ஆட எமை ஆட்டு வித்தவள்
இரவாடும் வல்லி உமையே
இறப்பென்னை ஆட்டாமல் எடுத்தாண்டு கொள்ளவே
இணையாக வந்த வடிவே

புவி ஆடும் ஆட்டத்தில் போக்காமல் எமை வந்து
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-35

வேந்தர்கள் வரவேற்க விருது்கள் பல வாங்க
விருப்பமும் எமக்கு வேண்டா
வித்தாரச் சொற் பேச்சில் விளைகின்ற புகழுக்குள்
விழுகின்ற நிலையும் வேண்டா

மாந்தர்கள் மத்தியில் மகராசன் இவன் என்று
மதித்திடும் கூட்டம் வேண்டா
மரியாதை காட்டலில் தெரியாது அகங்காரம்
மனதுக்குள் நிற்க வேண்டா

ஏந்திடும் பொற்குவை ஏவலர் காவலர்
இத்யாதி சேனை வேண்டா
இணையாக என்றென்றும் துணையாகி நீ ஒன்ற
இகத்திலே தனிமை வேண்டா

போந்திடும் அருள் கொண்டு புரிகின்ற கருணைக்குள்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-36

ஆவென்று உலகங்கள் அண்ணாரும் அளவுக்குஎன்
ஆவலை வளர்க்கவில்லை
அகிலத்தில் யான்முதல் ஆகினேன் என்கிற
அகம்பாவம் சிறிதும் இல்லை

தாவென்று உனைக்கேட்டுத் தான்பெறும் கட்டாயம்
தரைமீது தேவை இல்லை
தாய்தராது எங்கேபோய்த் தங்குவள் என்கின்ற
தைரியம் இழக்கவில்லை

வாவென்று அழைக்கையில் வாராது இருத்தலோ
வனிதைக்கு நல்லதில்லை
வரம்கோடி கேளாமல் வழங்கிடும் வல்லபீ
வருத்திடல் நீதி இல்லை

போவென்று நின் ஆடல் போக்கிவைத் தாய் என்னைப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-37

பணம் வேண்டும் வாழ்க்கையில் பசை வேண்டும் என்றெலாம்
படியிலே நின்றதுண்டா
பதினாறு பேற்றோடு படை வேண்டிக் கீர்த்தி பால்
பைத்தியம் ஆனதுண்டா

அணை வேண்டி நில்லாத ஆசைபாற் செல்வத்தை
அணுகவும் விட்டதுண்டா
அளவற்ற பரப்புக்குள் நிலபுலச் சொத்துக்குள்
ஆசைவாய்ப் பட்டதுண்டா

கணைவேண்டிக் கரைகிறேன் கருப்புவில் லாள்தரும்
காதல்விட் டேதும் உண்டா
கடலாக வந்தென்னைக் கரைத்துவொன் றாக்கையில்
காலன்பால் அச்சமுண்டா

புணை வேண்டி நத்தினேன் பூங்கரத் தால் என்னைப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-38

மன்றேறிக் கைதட்டல் மயக்கத்தில் யான்நின்று
மாழ்கவோ நெஞ்சில் ஆசை ?
மதியாளன் இவன் என்று பதினாலு லோகமும்
மறுகவோ கொஞ்சம் ஆசை ?

குன்றேறி புகழ் உச்சிக் கோல்தொட்டு அரசாளும்
குறிகளில் இல்லை ஆசை
குவிக்கின்ற செல்வத்தில் கொடிகட்டித் தர்பாரில்
கொள்ளவும் இல்லை ஆசை

நின்றேறி அகங்கார நிலைமட்டும் சதம் என்று
நிற்கவும் இல்லை ஆசை
நித்திலப் பூங்கோதை கைக்குளே பனியாகி
நெகிழவே மட்டும் ஆசை

பொன்றாமல் பொற்றேரில் ஏற்றிஉன் நாட்டுக்குள்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-39

போவோரை வருவோரைப் புறம்பாடிப் போற்றவோ
பூதலம் அவதரித்தேன் ?
பொன்னுக்கும் பொருளுக்கும் புத்தியைப் போக்கவோ
பூமியில் நான் ஜனித்தேன் ?

ஏவாரம் என்பதோ இலக்கியத் திற்கிலை
என்பதாற் கவி எடுத்தேன்
எழுத்துக்கள் பிறர்தமைத் துதிக்கவும் ஏத்தவும்
இல்லாத வரி எடுத்தேன்

சாவோரம் செல்லாமல் தடம்காட்டுவித்தவள்
தந்திடும் அருள் மலர்த் தேன்
தனை மாந்த வே ஆசைப் படுகிறேன் அல்லாமல்
சரித்திர மோ விரித் தேன் ?

பூவோரம் எனக்காப் பூப்பதும் எனக்காகப்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

பாடல்-40

பசியாத உடலுக்கும் பரக்காத மனசுக்கும்
பலகாலம் நான் ஏங்கினேன்
பாவை உன் பார்வைக்குள் வரும் பாது காப்பிலே
பயம் அற்று நான் தூங்கினேன்

நசியாத கூட்டுக்கும் நமன் ஓட்டும் பாட்டுக்கும்
நாள் எல்லாம் கவிதாங்கினேன்
நடு நேத்தி ரத்தாள்மேல் நான் கொண்ட நாட்டத்தில்
நலுங்காம லே தூங்கினேன்

நிசியேதும் எப்போதும் நெஞ்சுக்குள் நினை நட்டு
நெடு மூச்சுக் கள வீங்கினேன்
நெருப்புக்குள் எரியாமல் நிலத்துக்குள் சரியாமல்
நிணக்கூட்டில் நினை வாங்கினேன்

புசியாத அமிழ்தொன்று பசியாற வே தந்து
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே
 

 

 

 

 

பரிசு இங்கு தந்தது உன் பதம் என்னில் பதிலுக்குப்
பதம் கோடி நான் ஈயவோ
பகிரங்க மாய் அருள் பாலிக்க வந்திட்ட
பட்டாளம் உன் தேயமோ

திரிசங்கு போல் சொர்க்கம் சிருஷ்டிக்கத் தேவையோ
தேவி நீ அஃதில்லையோ
தேவைக்குத் தருகின்ற சிரிப்புண்டு அதற்குள்ளே
சிக்குண்டு நான் தோயவோ

பரிசங்கள் யாரோடும் எமக்கில்லை அம்மைஉன்
பற்றுக்குத் தலைசாயவோ
பற்றிக் கொண்டேன் கழல் பாடகத் தொலியோடு
பாகான கலை வேயவோ

புரிசங்குக் கழுத்துக்குள் புரண்டாடும் மாலைபோல்
பொத்தியே ஆள்க நிலவே
பூங்காற்று மணம்வீசக் கடவூரில் புலமகொண்டு
புவியாளு கின்ற மயிலே

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.